வாழ்க்கையில் தாம் எடுத்த காரியத்தை செவ்வனே முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் ஆயிரத்தில் ஒருவராகவே இருப்பர். அதிலும் அந்த காரியம் பெரியதாக இருக்கும் பட்சத்தில் அதை நிறைவேற்றி வெற்றி காண்பவர் கைவிட்டு எண்ணிவிடும் அளவு வெகு சிலராகவே இருக்கிறார்கள். வெற்றி என்று குறிப்பிடும் போது டாக்டர் ஜோசஃப் மர்ஃபி குறிப்பிட்ட இந்த வாசகம் தான் நினைவுக்கு வருகிறது.
“நீண்ட கால அமைதியும், பேரானந்தமும், மகிழ்ச்சியும் வெற்றியைக் குறிப்பவையாகக் கொள்ளலாம்”
அவரவர் ஏதேதோ வெற்றி என்கிறார்கள். ஆனால் மனம் சொல்வதை செய்து, அந்த செயலின் மூலமாக நிறைவை பெற்று அதனால் பேரானந்தம் அடைவதும் அதன் பயனாக நீண்ட கால அமைதி பெறுவதும் மகிழ்ச்சியாக வாழ்வதும் தான் உண்மையான வெற்றி. அந்தப் பேறு அனைவருக்கும் கிடைப்பது கிடையாது. உலகம் சொல்லும் புற வெற்றிகள் அடைந்தாலும் வாழ்க்கை நிறைவடைவதில்லை. ஏதோ ஒரு வெறுமை எங்கோ ஒட்டிக் கொள்கிறது.

அப்படித்தான் இந்த பயணியின் வாழ்வில் ஒரு பெரும் ஆசைத் தீ பற்றிக் கொள்கிறது. இந்த உலகத்திற்கே ஞானத்தின் விளக்கை ஏற்றி வைத்த புத்தரின் ஞானதேசத்திற்கு போய் பார்த்துவிட வேண்டும் என்ற கொழுந்து விட்டெறியும் தீ. இன்று போல போக்குவரத்து எல்லாம் அன்று இல்லை. போதாக்குறைக்கு அரசியல் தடைகள் வேறு. ஆனால் அதையெல்லாம் மீறி சீனாவிலிருந்து புத்தர் ஞானமடந்ததாக சொல்லப்படும் போதி மரத் தனலடியில் வந்து நின்று தனது உண்மையான வெற்றியை நிலைநாட்டிய யுவான் சுவாங்கின் கதையை தெரியுமா உங்களுக்கு?
ஆமாம் வரலாற்று புத்தகத்தில் ஒரு வரியில் படித்த அதே யுவான் சுவாங் தான். “யுவான் சுவாங் சீனாவில் இருந்து வந்தார் போனார்”, என்று மட்டுமே பிள்ளைகளுக்கு கற்றுத் தரும் இன்றைய பாடப்புத்தகம் உண்மையில் பிள்ளைகளுக்கு கற்றுத் தரவேண்டிய அவரது பயணம் சொல்லும் ஒரு முக்கியமான விஷயமான “தர்மம் மற்றும் மன உறுதியை” ஏன் சொல்லித் தருவதில்லை என்பதற்கு கல்வித்துறைதான் பதில் சொல்ல வேண்டும். இப்படி எண்ணற்ற விஷயங்கள் வளரும் பிள்ளைகளுக்கு சொல்லித் தரப்படுவதே இல்லை. அது அடுத்த கதை.
“ததாகதரின் தேசத்தை கண்ட பிறகே மீள்வேன்”, என்று மன உறுதியுடன் கிளம்பும் யுவான் சுவாங்கிற்குதான் எத்தனை எத்தனை சோதனைகள். சோதனைகளையும் தாண்டுபவனல்லவா சாதனையாளன். மேற்கு நோக்கி புத்த பிக்குகள் பயணம் செய்து நாட்டின் எல்லையை தாண்ட கூடாது என்ற அரச சட்டம் தான் யுவான் சுவாங்கின் முதல் தடை. இந்த விஷயத்தை படிக்கும் போது எனக்குத் தோன்றியது எல்லாம் “எல்லைகளையும் வரைமுறைகளையும் சட்ட வரம்புகளையும் கடந்தவர்கள் அல்லவா துறவிகள். ஆனால் பேருண்மை புரியா அரசியல் இத்தடைகளை ஏன் விதித்திருந்தது. எல்லைகள் இல்லா ஒரே மனிதம் என்பதை இந்த அரசியல்வாதிகள் எப்போது புரிந்து கொள்ளப்போகின்றனரோ ?” என்பது தான். ஒரு வேளை பயணம் கடுமையானதாக இருக்கும் என்ற நல்லெண்ணத்தில் கூட “புத்தபிக்குகள் நாடு தாண்டி போகக் கூடாது,” என்று அரசரை சட்டமியற்ற வைத்திருக்கலாம். ஆனால் புத்தரே மனிதர்களால் வரையறுக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி வந்தவர் தானே. அதை மறக்கலாகுமோ? ஆனால் அரசனின் தடையை மீறி பயணப்படும் யுவான் சுவாங்கின் மனதில் தான் எத்தனை உறுதி. அதன் பின் அவன் அனுபவிக்கும் அத்தனை விஷயங்களையும் அழகாக புனைக்கதை வடிவில் சொல்லியிருக்கும் இந்த புத்தகம் தான் எவ்வளவு அழகு. அந்த நடை, காட்சிகளின் விவரணம். மனதில் பண்டைய சீனத்தையும் பாரதத்தையும், யுவான் சுவாங் கடந்து வந்த அந்த பாதையில் இருந்த அத்தனை காட்சிகளையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ஆசிரியர் அசோகன் நாகமுத்து.
யுவான் சுவாங்கின் பயணம் தர்மத்திற்கான பயணம். தர்மம் என்றால் பிறருக்கு அன்னமோ பொருளோ பகர்வதன்று. தனக்குத் தன் வாழ்க்கையில் வகுக்கப்பட்ட பாதையில் செல்வதும் அப்படி செல்லும் போது அதனால் ஏற்படும் நன்மைகள் உலகோருக்கு கிடைக்க செய்வதுவும தான் உண்மையான தர்மம். இப்படித்தான் பௌத்தம் சொல்கிறது. நான் ஹிந்து, இங்கு “சிலைகளை அழிப்போம்” என்று சொன்ன புத்தருக்கு இடமில்லை என்று சொல்பவர்கள் உண்மையில் ஹிந்து சனாதான தர்மம் ஆழமாக சொல்லும் உண்மையை உணராதவர்கள் என்றே நான் சொல்வேன்.
ஓஷோ பௌத்தம் குறித்து பேசுகையில் “பௌத்தம் எனும் விதை இந்தியாவில் விழுந்தது என்றாலும் அது வளரக்கூடிய வளமான மண் அங்கில்லை. ஒரு வேளை அது அங்கு வளர்ந்திருந்தால் இப்படி நாம் காணும் அளவு பெரியதாக வளர்ந்திருக்குமா தெரியவில்லை. அதனால் தான் அது தனக்கான வளமான மண்ணைத் தேடி கிழக்கு நோக்கி பயணித்தது” என்று சொல்வார்.
வாதம் செய்யாமல் புத்தரைக் குறித்தும் அவர் சொன்ன தர்மத்தின் பாதையை புரிந்து கொள்பவர்களுக்கு நிறைவாழ்வு நிச்சயம். அதைத்தான் யுவான் சுவாங்கும் செய்திருக்கிறார். மனம் சொல்லும் பாதையை தேர்ந்தெடுத்து அதன் வழியே சென்று பல ராஜ்ஜியங்களைக் கண்டு அதன் மூலம் எத்தனைப் பேருக்கு நன்மை. இதல்லவா தர்மம். ஆனால் அந்த “தர்மத்தின்” சுவையை அறிய பள்ளிப்புத்தகங்களில் “யுவான் சுவாங் வந்தார் போனார்” என்ற ஒற்றை வரி போதாது. இந்த புத்தகம் அந்த குறையை தீர்த்திருக்கிறது.
பிக்குவாகும் தேர்வில் கலந்து கொள்ள செல்லும் தனது அண்ணனுடன் சென்ற யுவான் சுவாங் வயது நிரம்பாததால் மடாலயத்தின் வெளியில் நிற்கும் போது மூத்த புத்த பிக்கு
“துறவியாக விரும்பும் உன் நோக்கம்தான் என்ன?” என்ற கேட்கிறார். அதற்கு தயங்காமல் ஆவேசத்துடன் யுவான் சுவாங் அளிக்கும் பதில்
“என் ஒரே நோக்கம், ததாகதரின் தர்ம ஒளியை பிறருக்கு பிரதிபலிப்பதுதான். அதற்காகத்தான் துறவியாஅ விரும்புகிறேன். என் பிறப்பின் விதியே அதுதான்.”
என்று சொல்வதில் தொடங்கும் அவன் பயணம் அந்த தர்மத்தை நிலைநாட்டுகிறதா, நோக்கத்தை நிறைவேற்றும் அந்த அற்புத சாகசங்களை புத்தகம் முழுவதும் கதையாக சுவாரசியமாக சொல்கிறது.
ஒவ்வொருவர் வாழ்விலும் அவரவருக்கான தர்மம், நோக்கம் என்று ஒன்று இருக்கிறது. தன் குடும்பத்தை பார்த்துக் கொள்வது என்பதில் தொடங்கி புத்தரை போல பெரிய நோக்கம் என்பது வரை விரிகிறது. முன்பே சொன்னது போல எல்லோரும் தம் நோக்கத்தை நிறைவேற்றுகிறார்களா என்பது தாம் அந்த நோக்கத்தில் கொள்ளும் உறுதியை மையமாக வைத்து மட்டுமே அமைகிறது. யுவான் சுவாங்கிற்கு அந்த உறுதி மட்டுமே துணையாக அமைந்திருக்கிறது. யுவான் சுவாங் சொல்வதை அவர் வார்த்தைகளிலேயே கேளுங்கள்.
“எந்த துயரங்களையும் சித்தார்த்தர் பார்த்துவிடக்கூடாது என்றுதான் அவரை அரண்மனைக்குள்ளேயே பொத்தி பொத்தி வைத்தார் சுத்தோதன மகாராஜா. ஆனால் முதுமை , நோய், மரணம் ஆகியவற்றைப் பற்றிய அனுபவங்கள் அவருக்கு வந்துவிடவில்லையா? அரண்மனையை விட்டு நள்ளிரவில் அழகிய மனைவியையும் அன்பான குழந்தையையும் விட்டு, ததாகதர் நிர்வாண விடுதலையை எண்ணி தன்னுடைய கந்தகா என்கிற கம்பீரமான குதிரையில் ஏறிப் புறப்பட்டார். அரண்மனையை விட்டுக் கிளம்புகையில் மாரன் அவரை வழிமறித்தான். அவரது மனத்தில் ஆசையைத் தூண்டுவதற்காக, “இன்னும் ஏழு நாட்களில் சாம்ராஜ்ய சுழற்சி ஏற்படும். நான்கு கண்டங்களுக்கும், அருகில் உள்ள இரண்டாயிரம் தீவுகளுக்கும் அது உம்மை அரசராக்கும். ஆகவே, அரண்மனைக்கே திரும்பும்’ என்றான். உலகையே உமக்கு உரிமை ஆக்குகிறேன் என்கிற வாக்குறுதி அது.
அதற்கு சித்தார்த்தர் என்ன பதிலளித்தார் தெரியுமா?
“அட மூடனே.. இந்த சிறிய ராஜ்யத்தில் இருக்கும் போதே உலகின் துயரங்கள் பற்றி எவ்வளவோ அறிந்து கொண்டேன். இதையே தாங்க இயலாமல் தப்பி ஓடுகிறேன். நீ உலகையே தருகிறேன் என்கிறாயா? நான் சொல்வதைக் கேள். உலகையே ஆனந்தத்தில் மூழ்கடிக்கும் குரலை எழுப்ப, தர்மத்தின் மணி எல்லா இடங்களிலும் ஒலிக்க ஓர் இயக்கத்தை உருவாக்குவதற்காக செல்கிறேன். கோடானு கோடி கிரகங்களுக்கும் நீ என்னை அரசனாக்கினாலும் என் வைராக்கியத்தை உடைக்க முடியாது” என்றிருப்பார். ஆனால் அவர் அப்படி சொன்னாரா என்பது தெரியாது. அதை விட அந்த வைராக்கியம் அவருக்குள் ஏற்படுத்தியிருந்த உறுதிதான் இன்று உலகையே மாற்றியிருக்கிறது. ததாகதரின் வாழ்வில் நான் கற்றுக் கொண்டதெல்லாம் உறுதி…உறுதி… அதைவிட்டால் வேரொன்றுமில்லை.”
யுவான் சுவாங் கௌதம புத்தரிடம் இருந்து கற்றுக் கொண்ட அந்த உறுதிதான் தனது தர்மத்தின் பாதையை, தன் நோக்கத்தை குறித்து எத்துணை தடைகள் வந்தாலும் உறுதியுடன் செல்ல வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட மனநிலை உடையவர்கள் மட்டுமே தான் எடுத்த காரியத்தை, தனது வாழ்வின் தர்மத்தை நிறைவேற்ற, நிலைநாட்ட முடிகிறது.
யுவான் சுவாங்கின் இந்த சாகச பயணத்தில் நீங்களும் பயணிக்கலாம். அந்திமழை இதழில் தொடராக வெளிவந்த “போதியின் நிழல்” தொடரை அதே அந்திமழை பதிப்பகத்தார் புத்தகமாக வெளியிட்டிருக்கின்றனர்.
“போதியின் நிழல்” புத்தகத்தை கீழ்காணும் லின்க்கிலிருந்து அமேசானில் பெற்றுக் கொள்ளலாம்.
வாசிப்பை எப்போதும் நேசிப்போம்.
அன்புடன்,
ஏ.வி.ஆர்.
நல்ல விஷயங்களை பகிர்ந்து உதவுங்கள்!